வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, September 15, 2015

"தியாக தீபம் திலீபனுடன் 12 நாட்கள்"

"தியாக தீபம் திலீபனுடன் 12 நாட்கள்" நூலில் இருந்து :

      நூலை எழுதியவர் : திரு. மு.வே.யோகேஸ்வரன் அவர்கள்

            இந்த உண்ணா நோன்பு வரலாறு நூலாசிரியரால் 1988 இல் எழுதி முடிக்கப்பட்டு, அன்று சென்னையில் முதல் பதிப்பாக வெளியிடப் பட்டது.அதன் பின்னர் ,தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க 90 களில் இரண்டாவது பதிப்பு நூலாசிரியரால் வெளியிடப்பட்டது. நூலாசிரியர் திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த நாளில் இருந்து கடைசி வரையில் கூட இருந்து, நிகழ்வுகளை புத்தகமாக வெளிக் கொண்டுவந்தவர். அவரின் நூலில் இருந்து அவரால் எழுதப்பட்ட பதிவுகள் தினந்தோறும் வெளிவரும்.


 திலீபன் (ராசையா பாத்தீபன்) பற்றி :

                    சராசரி உயரமும் பொதுநிறமும் மிக மெல்லிய தோற்றமும் கொண்ட இளைஞன்தான். இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன்..யாழ்  மாவட்டம், வலிகாமம் பிரதேசத்தில் உள்ள ஊரெழு என்னும் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட திலீபன் இராசையா ஆசிரியரின் கடைசி மகன் ஆவான்..அவனுக்கு இரு அண்ணன்மார் உள்ளனர்.சிறு வயது முதல் மிகவும் புத்திக் கூர்மையும் அதீத திறமையும் கொண்டு வளர்ந்தவன் பார்த்தீபன்..  அண்ணன்மார் இருவருமே படிப்பறிவும் அடக்கமும் உயர்ந்த பண்பாடுகளும் நிரம்ப பெற்றவர்கள்..தந்தையும் அப்படியே..அந்த ஊரில் மிகவும் மதிப்பும் செல்வாக்கும் மிக்க குடும்பம் ஆசிரியர் இராசையாவினுடையது.. என்றால் மிகையாகாது..சிறுவயதிலேயே திலீபன் தாயை பறி கொடுத்தவன், தாயன்பு என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த அவனை தந்தையும் அண்ணன்மார் இருவரும் ஒரு புறாக் குஞ்சைப்போல்தான் பொத்திப் பொத்தி வளர்த்தனர்..கைக்குழந்தையாக இருக்கும்போதே திலீபன் தாயைப் பறிகொடுத்தவன் என்பதால் ஆசிரியர் இராசையா தன் மகனுக்கு ஒரு தாயாகவும் இருந்து மகனை பாசமுடன் வளர்த்து வந்தார்.
சின்னஞ் சிறிய தன் மகன் தாயில்லாமல் வளர்ந்த காரணத்தினால் சின்னம்மாவின் அரவணைப்பில் உண்மைத் தாயன்பு கிடைக்காது என்பதை உணர்ந்த அவர், தன் மகனுக்காகவே மறுமணம் செய்வதைக்கூட இறுதிவரை தவிர்த்துக் கொண்டவர்..


 மகன் பிற் காலத்தில் தனது மண்ணின் மக்களுக்காக தன்னையே தியாகம் செய்வான் அவன் என்பதை உணர்ந்திருந்ததால் போலும் தந்தையும் தன் மகனுக்காக தனது இன்ப வாழ்வை தியாகம் செய்து கொண்டார் போலும்..?என்னே அந்த தியாகக் குடும்பத்தின் பாரம்பரியம்..தனித் தன்மை..?

பனைகள் கொஞ்சும் ஊரெழுக் கிராமத்தில் பனை வடலியை தென்றல் தழுவும்போது மைனாக்களும் குயில்களும் மதன கீதம் இசைக்கும் தாலாட்டில் வளர்ந்தவன்தான் பார்த்தீபன் ..குயில்களால் தமக்கென கூடுகட்ட முடியவில்லையே என்னும் ஏக்கத்தால் அதை அவை பாடலாக வெளிவிட்டபோது அதை இவன் சிறுவயதிலேயே சுவாசித்திருப்பான் போலும்..? அதனால்தானோ இயல்பிலேயே அவனுக்கு தான் ஒரு சொந்த நாட்டில் வசிக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்ததோ..?

இயல்பிலேயே திலீபன் படிப்பில் ஆர்வம் உள்ளவன் என்பதால் சிறுவயதுக் கல்வியை தனது சொந்த ஊரான ஊரெழுவிலும் பள்ளி இறுதி வகுப்புவரை யாழ்.இந்துக் கல்லூரியிலும் பயின்றவன் பார்த்தீபன். அவனது படிப்பறிவுக்கு எல்லையே இல்லை என்னும் காலம் ஒன்று ஒரு காலத்தில் இந்துக் கல்லூரியில் இருந்தது என்பது மறைக்க முடியாத உண்மை..வகுப்பில் எப்போதும் முதலாவதாக வந்து தனது அறிவுத் திறமையை நிரூபித்துவந்தான் அவன்.எழுபதுகளில் சிங்கள அரசு தமிழ் மாணவர்களின் பட்டக் கல்வியை மருத்துவ கல்வியை பாழடிக்க கொண்டுவந்த தரப்படுத்தல் என்னும் திட்டமிட்ட சதியினால் எண்ணிறைந்த தமிழ் மாணவர்கள் தமது உயர் கல்வியை இடை நிறுத்தி வெளிநாடுகளுக்கு ஓடத் தொடங்கிய காலம் அது..எண்பதுகளின் ஆரம்பத்தில் பாத்தீபன் க.பொ.த.உயர்தர வகுப்பில் மிகத் திறமையாக சித்தி பெற்று ஸ்ரீலங்கா அரசின் தரப்படுத்தல் அளவையும் தாண்டி யாழ் மருத்துவ பல்கலை கழகத்துக்கு தெரிவாகி படிக்கச் சென்றான்..அந்தக் காலங்கள் தமிழ் இனத்துக்கு கறுப்புக் காலங்கள் போலும்..? இனக்கலவரத்தின் கோரப்பிடியில் சிக்கி தமிழ் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருந்த காலம் அது.சிறிலங்காப் படைகளின் அட்டூழியம் எல்லை தாண்டி சென்று கொண்டிருந்த காலமும் கூட அதுதான்..  சிறையில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் சிங்களக் கொடுவெறியர்களால் ஈவிரக்கமின்றி கொல்லப் பட்டதும்..இலங்கை முழுவதும் பாரிய இனக் கலவரத்தை திட்டமிட்டு ஏற்படுத்தி தமிழர்களை சிங்களவர்கள் கொன்று குவித்ததும்.. தமிழ் பெண்கள் வகை தொகையின்றி சிங்களப் பகுதிகளில் சிங்களக் காடையர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டதும் .அதே காலப்பகுதியில் தான்.அதுபோல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாபெரும் திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதல் நடை பெற்று பதின்மூன்று ராணுவத்தினர் கொல்லப் பட்டதும்  அப்போதுதான்.. இனப்பிரச்சனையும் தமிழர்களின் அழிவும் திலீபநின்மருத்துவக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆம் ஊரெழுவில் பிறந்த அந்த விடுதலைப் புலிகளின் கூட்டை நோக்கி பறந்தது..திலீபன் என்னும் பெயரில் ஆயுத மேந்தி தன இனத்துக்காக சுதந்திர கீதம் பாட ஆரம்பித்தது..


முதலாம் நாள் உண்ணா நோன்பு (15.09.1987)
***********************************


       
                  




15.9.1987 அன்று வானத்தில் சூரியன் தக தகக்க தொடங்கினான்..சிட்டுக்கள் வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன.இதமாக மேனியை வருடிக்கொண்டிருந்தது வாடைக்காற்று..

நல்லூர் கந்த சுவாமி கோயில் மைதானத்தில் போடப்பட்டிருந்த மிகப்பெரிய மேடையை நோக்கி திலீபனுடன் அப்போது புலிகளின் பிரதி தலைவராக இருந்த மாத்தயாவும் வந்து கொண்டிருந்தார்.

(வரலாறுகள் அப்படியே எழுதப் படவேண்டும் என்பது விதி)..ஏற்கனவே என்னிடம் திலீபன் சொன்னவாறு அவனை மேடை அருகே எதிர்கொண்டு கைகுலுக்கியபோது தேன் ஒழுகும் சிரிப்போடு "கலோ மு.வே.யோ..வாங்க".. என்று நட்பின் குரல் தழுதழுக்க அழைத்தான் திலீபன்.என்னருமை நண்பன்..அப்போதே எனக்கு கண்கள் பனித்து விட்டன..எல்லோரும் மேடையை நோக்கி நடந்தோம்..அப்போது ஒரு வயதான அம்மா ஆரத்தி தட்டை கொண்டுவந்து திலீபனுக்கு ஆரத்தி எடுத்தபோது..அங்கே
ஒருவித அமைதி நிலவியது..

                                   


பின்னர் மேடையை நோக்கி திலீபன் நடந்தான்..
சிறிதளவு மக்களும் போராளிகளும் அங்கே காணப்பட்டனர்.மேடையிலே
ஒருகட்டில்..ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தன.

மாத்தையா மேடையில் ஏறாமல் வெளியில் நின்றார்.. என்னைத் தன்னுடன் வந்து அமருமாறு திலீபன் அழைத்தான்..அப்போது திலீபனின் மேடைக்கு அருகே வேறு ஒரு சிறிய மேடையும் அமைக்கப் பட்டிருந்தது. சகலவேலைகளையும் முன்னின்று மிக நேர்த்தியாக செய்திருந்தார் ராஜன் என்பவர் பின்னாளில் இவரே யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்தவர். மேடையில் வந்து திலீபன் அமரும்போதே அவருக்கு தெரியாமல் அவரின் நாடித்துடிப்பை அவரின் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது கணக்கிட்டுவிட்டேன் 72 என்று அண்ணளவாக அது இருந்தது..

எனக்கு மனம் திருப்தியாக இருந்தது..திலீபன் அன்றைய பத்திரிகைகளை வாசிக்க தொடங்கியபோது .பக்கத்து மேடையில் இருந்து கவிக்குயில்கள் முழங்கத் தொடங்கின..ஆம்.சிறுவர் சிறுமியர் ஒவ்வொருவராக வந்து கவிதை பாடத் தொடங்கினர்..பத்திரிகை படிப்பதை நிறுத்தி விட்டு அதையே கவனித்துக் கொண்டிருந்தான் திலீபன்..அப்போது அங்கே 'கணீர்'என்னும் ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கியது.

கவிஞர் காசி ஆனந்தன் "திலீபன் அழைப்பது சாவையா..இந்த சின்ன வயதில் இது தேவையா..? என்று நீண்ட கவிதை ஒன்றை முழங்கிக் கொண்டிருந்தார்..

"எப்பிடி காசி அண்ணையின் கவிதை அண்ணா..?"என்று என்னிடம் கேட்டார்
திலீபன்..காசி அண்ணையின் கவிதை எப்பவுமே மட்டக்களப்பு முந்திரிப் பழம்தானே என்று சிரித்தபடி சொன்னேன்..

"நீங்களும் ஒரு கவிதை பாடுங்கோ" என்றார்..

"நான் எழுதவும் இல்லை எழுதும் மூட்டிலும் இல்லை"..என்றேன்..

அவருக்கு எனது மன நிலை புரிந்து விட்டதால் மேலும் என்னை வற்புறுத்தவில்லை..


அன்பர்களே ..!மீண்டும் நாளை சந்திப்போம்.
(தொடரும்)

No comments:

Post a Comment