வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 30, 2016

ஐயோ..........ஐயகோ...

ஐயோ ஐயோ
என் இந்திய திருநாட்டிலா
இந்தவொரு இழிநிலை
விவசாய நாடு
என்றழைத்த
இந்திய தேசத்திலா
இந்த கொடுமை
பார்க்கும் போதே
மனம் பதறுகின்றதே
உயிர் சுமையாகின்றதே!
                                             
தனிமனிதன் ஒருவனுக்கு
உணவில்லையேல் இச்ஜெகத்தினை
அழித்திடுவோம் என்றான்
மீசைப்புலவன் பாரதி
ஆனால் இன்றோ
உலகிற்கெல்லாம்
உணவளித்த
எம் விவசாயிகள்
வாயில் எலிகளை
சுமந்து போராடுகின்றனர்
விவசாயத்தை காத்திட!!
                                        
கொடுமை கொடுமை
இதை காணும் போதே
என்னிதயத்தில்
செங்குருதி வடிகின்றதே
மனிதா மனிதா
நீ உணர்வுள்ளவனென்றால்
இன்றே சிந்தித்திடு
இன்ியும் காலமில்லை
இனியும் நேரமில்லை
வாடிய பயிர்களை
கண்ட போதெல்லாம்
மனம் வாடினார்
முன்னோர் வள்ளலார்
ஆனால் நேற்று
தாங்கள் பிறப்பித்த
நெற் பயிர்கள்
பிறந்து வாழ வழியில்லாது
வாடிய கதிர்களை கண்டு
தங்கள் உயிர்களையே
மாய்த்துக் கொண்டனர்

                               

இறைவா இறைவா
ஏன் இந்த சோதனை
எங்கள் விவசாயிகளுக்கு
அரசிற்கும் கட்சிகளுக்கும்
தான் இரக்கம் இல்லை
உமக்கும் இரக்கம் இல்லையா
எம் விவசாயிகளின் மீது
ஐயோ ஐயோ
விவசாயிகளின் தற்கொலையும்
விவசாயத்தின் அழிவும்
நாட்டிற்கே அழிவு என்பதை
என்று உணர்வீர்களோ?????????????





Wednesday, December 28, 2016

நான் "கவிஞர்" ஆகிட்டேன்.......................

முகநூலில் "செய்யுட் கலை சூடிகை" https://www.facebook.com/groups/1563509013958081/ எனும் குழுமத்தில் 27.12.216  அன்று இணைந்து, அன்றைய தேதியில் நடந்த
  "தேவதையை கண்டேன்" எனும் தலைப்பில் எழுதிய கவிதை அக்குழுமத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கவிஞர் எனும் அடைமொழியுடன் பாராட்டப்பட்டது..


அக்கவிதை :          " தேவதையை கண்டேன்"

காலை நேரத்தில்
சாலை ஓரத்தினில்
பாதந்தொட்டும் தொடாமலும்
நடந்து சென்றாள்!!!

கருங்கூந்தலில் இருந்து
சிதறிடும் நீர்த்துளிகள்
ஓவியமாய் சாலையில்

தொட்டவுடன் இழுத்திடும்
மின்சாரமாய் அவள்
விழிகளை கண்டவுடன்
இதயத்தை இழுத்து கொண்டாள்
தன்னுடனே!!!

மண்ணும் இரும்பும்
கலந்திருந்தாலும்
இரும்பினை
கவர்ந்திழுக்கும்
காந்தம் போல்
என் மனதினை
கவர்ந்திழுத்தாள்
அவளுக்காக
அவளோடு வாழ்வதற்காக

ஆம் இப்போது தான்
உணர்கின்றேன்
சில தேவதைகளால்
பூமியிலும் வாழ முடியுமென்று

என்னைப் பார்த்த
நொடிப்பார்வையில்
எனக்குள் ஒளிந்துக்கொண்டேனே
காதல் உலகத்தில்

மணி நேரங்கள்
பேச வேண்டியதையெல்லாம்
புரிந்துக் கொண்டேன்
நின் ஒற்றை பார்வையாலே

Friday, December 23, 2016

கூட்டல் கழித்தல்

பணத்தை பற்றி
மட்டும்
கணக்கு போடுவதில்லை
மனித மனம்
உறவுகளின்
நட்புகளின்
வார்த்தைகளையும்
கூட்டல் கழித்தல்
கணக்குப் பார்க்கின்றது!!!!


ஆறுதலளித்திடும்
வார்த்தைகள் கூட்டலாக
இதயத்தை கிழித்திடும்
வார்த்தைகள் மட்டும்
இருமடங்கு கழித்தலாக
கூடவே வேதனையையும்

மவுனம் மவுனம்...................

முனிவரின் மவுனம்
மேன்மையை நாடியே!!!
தம்பதிகளின் மவுனம்
புரிதலை மேன்படுத்தவே!!!
காதலர்களின் மவுனம்
அன்பின் ஆழத்தை காட்டிடவே!!!!
நண்பர்களின் மவுனம் - நட்புக்குள்
நலமற்றதை மறந்திடவே
(நட்பினை அல்ல)
பெண்ணின் மவுனம்
மனக்குழப்பத்தை மூடிடவே!!!!
ஆண்களின் மவுனம்
வீண்பிரச்சனைகளை தவிர்த்திடவே!!!!
அம்மாவின் மவுனம்
அப்பாவை எதிர்த்திட முயலாமையே!!!
அப்பாவின் மவுனம்
குடும்பநலனை எண்ணியே!!!!!
மவுனங்களும்
பார்க்கும் பார்வையிலேயே

முற்றுப்புள்ளியை சிந்திக்காதே.....

மரணமே
முடிவென்று
வாழ்ந்தோ மென்றால்
வாழ்நாளின்
ஒவ்வொரு
நிமிடங்களும்
நரகமே!!
பிரிவு
உண்டென்று
நட்புக் கொண்டால்
பழகிடும்
ஒவ்வொரு
நாட்களும்
பொய்யானதே!!!!
காதலிக்க
ஆரம்பிக்கும் பொழுதே
முடிவினை
யோசித்தால்
அக்காதலும்
சுவையற்ற உணவாகுமே!!




முற்றுப்புள்ளி
உண்டென்று
எழுத தொடங்கினால்
ஒவ்வொரு
எழுத்துக்களும்
உயிரற்றதே!!!!

                                      

தொடக்கமும்
முடிவும்
நம் கைகளில் இல்லை

ஆனால்
இடைப்பட்ட
பயணம்
இன்பமாகவா அல்லது
துன்பமாகவா
என்பது
நம்மனப் பார்வையிலே!!

கையளவு இதயத்தில்

கையளவு இதயத்தில்
நிறையில்லாது உன்னை
சுமக்கின்றேன்!!

தமிழ் மொழியில்
அத்தனை யெழுத்துக்களையும் கொண்டு
உனக்கு கவிமாலை
சூட்டுகின்றேன்!!!

ஊடலாக யிருந்தாலும்
விலகிட அல்ல இன்னும்
நெருங்குவதற்கே!!!!





மவுனமாயிருப்பதும்
மரணிப்பதற்கு அல்ல
இன்னும் அதிகமாக
புரிந்துக் கொள்ளவே!!!!

உனக்காய்
கூண்டுக்குள் கிளியாக
இருந்தாலும்
மகிழ்வாய் உணர்கின்றேன்

                                 

காளானாய் பூத்தது காதல்

சந்தித்த நொடிகளில்
விழிகள் மோதிய
பொழுதுகளில்
யுகாயுகங்கள்
சென்று
மீட்டு விட்டேன்
பல ஜென்மத்தின்
நம் காதல்
நினைவலையினை!!!



விழிகளின்
மோதலில்
காதல் மின்னல்
வெட்டியது
நம் இதயங்களில்!!!!





மொழிகளுக்கு
வேலையில்லை
ஆனால்
காதலின்
நினைவு சின்னமாய்
காளானாய் பூத்தது
நின் விழிகளின்
நினைவுகள்


                  

என்னவளிடம் கேளுங்கள்

மலர்களே மலர்களே
மாலையிலும்
வாடாதிருப்பது
எப்படி யென்று
வாடா மலர்
அவளிடம்
கேட்டுக் கொள்ளுங்கள்!!!

வெண்ணிலவே வெண்ணிலவே
தேயாமல் மாறாமல்
அழகாயிருப்பது
எப்படி யென்று
என் நிலவிடம்
கேட்டு
தெரிந்துக் கொள்ளுங்கள்.........



ஆதவனே ஆதவனே
கோபத்திலும்
சுட்டெரிக்காமல் இருப்பது
எப்படி யென்று
என்னவளிடம்
கேட்டு
தெரிந்துக் கொள்ளுங்கள்.....

உன்னை கண் தேடுதே

உன்னை
கண் தேடுதே
உன்னை ரசித்திட
உன்னை விரும்பிட
கண் தேடுதே!!!

கண்களில்
உள் வாங்கி
இதயத்தில்
பிம்பமாய்
பிரதிபலிக்கின்றேன் நான்
நின் நினைவுகளை!!!




உன்னை கண் தேடுதே
சண்டையென்றாலும்
நட்பென்றாலும்
உன்னையே தேடுதே
என் கண்கள்!!!!!
கோபமாய் பேச்சினை
முடித்தாலும்
துண்டித்தாலும்
உன்னையே தேடுதே
என் கண்கள்.......
நட்பின் அர்த்தமாய்
நீ
நட்பின் உருவகமாய்
நீ

டிசம்பர் 23 : தேசிய விவசாயிகள் தினம்

டிசம்பர் 23 : இன்று தேசிய விவசாயிகள் தினம்!


மறைந்த இந்திய பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் உணவு தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதையும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும் விவசாயிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எப்போதும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் தேசிய விவசாயிகள் தினத்தன்று அரசு விடுமுறை.

தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 130 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இருக்கிறது. இதில், 51 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. தமிழக மக்களில் சுமார் 55 சதவிகிதம் பேர் (3 கோடிப்பேருக்கு மேல்) விவசாயம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





இன்றைய காலகட்டத்தில் விவசாயம் நலிவடைந்து வருகிறது. ஏனெனில், விளை நிலங்கள் அனைத்தும் வீடு கட்டுவதற்கு பிளாட்டுகளாக மாறி வருகிறது. அதனால், எதிர்கால தலைமுறைகளை கருத்தில்கொண்டு விவசாயத்தை விரிவுபடுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்களிடையே விவசாயத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.

இந்தியாவில் 2009ஆம் ஆண்டில் நடந்த தற்கொலையில், 62 சதவிகித விவசாயிகளும், 2010ஆம் ஆண்டில் நடந்த தற்கொலையில் 66.49 சதவிகித விவசாயிகள் என்று, தேசிய குற்றப் பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



நாட்டில் விவசாய தினம் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் விவசாயத்துக்கோ, விவசாயிக்கோ எந்தவொரு முன்னுரிமையும் எதிர்காலமும் இல்லாமல் இருக்கின்றனர் என்பது விவசாய நாடான இந்தியாவிற்கே அவமானமான ஒன்று..

எங்கள் கரங்களை சோற்றில் வைத்திட, தங்கள் கால்களை சேற்றில் வைத்து, நேரங்காலம் பார்க்காது உழைத்திடும் என் விவசாயி உறவுகளின் பாதம் தொட்டு சொல்கின்றேன் "விவசாயிகள் தின" வாழ்த்துக்கள்

மாற்றங்களில்லாத வாழ்வு............

டிசம்பர் 23: தேசிய விவசாயிகள் தினம்


மாற்றங்கள் மாற்றங்கள்
மாற்றங்களில்லாத
வாழ்வு என்றென்றும்
அரசு மட்டுமல்ல
இயற்கையும்
புறக்கணித்திடும் வாழ்வு!!!!

                                    



கோடிக்கணக்கில்
கடன் இருந்தும்
வளமான வாழ்வு
தொழிலதிபர்களாய்
ஆனால் நாங்கள்பிறரை வாழ்விக்க
கடனாளிகளாய்!!!!!







மண்ணை நேசித்து
மண்ணிலே உழைக்கின்ற
எங்கள் வாழ்வும்
மண்ணாய் இருக்கின்றதே!!!!!
வேற்று கிரகத்தில்
ஆய்வு செய்திட்டாலும்
இப்புவியில் வசிக்கும்
எங்களை வாழ்விக்க
ஆய்வு யாரும்
செய்ய வில்லையே!!!!!

                           
உழைத்து உழைத்து
தேயவில்லை நாங்கள்
உழைத்தும் எங்களுக்கு
பயனில்லையே
என்றெண்ணியே நினைத்து
ஓடாய் போனோம்.........
                           
நாங்கள்
ஆடம்பர வாழ்வு
வாழ்ந்திட கேட்கவில்லை!!!
உங்களின் பசியாற்றிடவே
எங்களின் வாழ்க்கையை
காத்திட வேண்டுகின்றோம்!!!!
                          
ஆட்சிகள் மாறினாலும்
கட்சிகள் மாறினாலும்
தலைமை மாறினாலும்
எங்கள் நிலைமை மட்டும்
மாறிடவே யில்லை!!!!

Tuesday, December 20, 2016

வானமாய் காதல்.

மலர்ந்த மலராய்
புன்னகைத்தாள்
தீண்டிட 
எண்ணியப் பொழுது
வெட்கத்தினால்
தொட்டாற் சினுங்கியாய்
சுருங்கிக் கொண்டாள்
வானமாய் காதல்
விரிந்தது......


Image may contain: 1 person, close-up

வார்த்தையெனும் ஆயுதம்

பலமான
உறவுகள் கூட
வார்த்தையெனும்
ஆயுதங்களினால்
விரிசல் உண்டாகின்றது!!!!

உன்னை பார்த்த பின்பு நான்



என்னுள்ளே பிறந்து
என்னுள்ளே சுவாசித்து
என்னுள்ளே வளர்ந்த
என் இதயம்
என்னவளின்
விழிகளைக் கண்டவுடன்
என்னை மறந்து
என்னை விட்டு
என்னை தள்ளிசென்று
அவளின் நினைவாய்
மாறியதெப்படி???
இதயம் இடமாறுவது தான்
காதல் என்பதோ

காலை தரிசனம்...........

மார்கழி குளிரில்
அதிகாலையில்
நீராடி
ஈரக் கூந்தலுடன்
சாலையில்
நீர்த் துளிகள் சிதறிட
ஆதாம் காலத்து
தேவதையாய்
அன்ன நடை
பயின்று செல்கின்றாள்!!!
அவள் கூந்தலில்
சூடிய மலருக்கும்
மணந்தருகின்றாள்!!!
அவள் காலில்
சுற்றிய கொலுசிற்கும்
சிரிப்பொலி தருகின்றாள்



நீரின்மேல் தெரிந்திடும்
அ்ல்லி மொட்டாய்
அவள் முகம்
மலர்ந்தும் மலராத
வெட்கத்துடனும்
அவள் விழிகளில்
நாணத்துடனும்
நடக்கின்றாள் முன்னாடி
அவளை பார்த்திட்ட
விழிகளும் செல்கின்றதே
அவள் பின்னாடி!!
நின் வெண்
பற்களை கண்ட
வெண்ணிலவும்
மறைகின்றானடி
வெட்கத்தில்!!!!
உன் ஒளிர்ந்திடும்
விழிகளை காண
ஆதவனும் கிழக்கில்
ஒளிந்து பார்க்கின்றானடி!!!
இறைவனை தரிசிக்க
நீயோ செல்கின்றாய்
உன்னை தரிசித்திட
இளங்காளைகளின் மனங்கள்
உன்னை நாடியே
தவங் கிடக்கின்றது பெண்ணே!!!!!

ஆண்ட்ராய்டு

குடும்பங்களில்
உறவுகளின் சங்கமத்தை
திருடுகின்றான்
பிள்ளைகளோடு
விளையாடிய இன்பத்தை
திருடுகின்றான்
உறவுகளின்
இடையே அன்னியோன்யத்தை
திருடுகின்றான்


முகமறிந்தவர்களை
புறக்கணித்து
முகமறியா உறவுகளை
இணைக்கின்றான்
ஓடியாடி விளையாடிய
குழந்தைகளையும்
ஒரேயிடத்தில்
அமர்த்துகின்றான்
மகளை வாகனத்தில்
அழைத்து சென்றிடும்
தகப்பனுக் கிடையில்
மூன்றாவனாக தெரியாமலேயே
பயணஞ் செய்கின்றான்.....
பெற்றோர்கள் காட்டிடாத
உலகினை பிள்ளைகளுக்கு
அறிய செய்கின்றான்!!!
நட்பையும் காதலையும்
காமத்தையும்
தொலை தூரத்தில் இருந்தாலும்
இணைத்திடும் பாலமாகின்றான்
அவன் தான்
நம் கரங்களில்
இன்று தவழ்கின்ற
ஆண்ட்ராய்டு போன்

நான் உன்னுள்

உன்னோடு
என்னுதடுகள் பேசவில்லை
ஆனால்
தினந்தோறும் தொடர்ந்து
பேசுகின்றேன்
என் விழிகளினால்
உன்னை ரசித்தப்படியே





என் பார்வை
அம்புகள் தொடர்ச்சியாக
உன்மீது ஆனால் நீயோ
அவற்றை
திசை மாற்றி விடுகின்றாய்
உன் ஒரே
முறைப்பில்
தோற்று தோற்று
போகின்ற பார்வைகளே
நிலையான நினைவுகளாய்
என் நெஞ்சினில்
வடுக்களாய்
அமர்ந்துவிட்டதடி!!!!!!
உன் விழிகள்
என்னை நோக்கியே
உன் செவிகளில்
எங்குரல் மட்டுமே
உன் இதயத்தில்
துடிப்பாய் நான் மட்டுமே
இருந்திடவே விரும்பிடும்
அன்பாய் நான் உன்னுள்

உனக்காகவே...............

உனக்காகவே
நான் இருந்தேன்
உன்னையே
நினைத்தேன்
உன்னிலே
தேடினேன் என்னை
                       
உன்னையே
சுற்றி வந்தேன்
தேன் தேடிடும்
வண்டாய்!!

ஆனாலும்
என் அன்பினை
புரிந்துக் கொள்ள
உன்னால்
இயல வில்லை

என் அன்பிற்கு
கோப பார்வையையே
பாவை நீ
பதிலளித்தாய்

வார்த்தை
சாட்டையினால்
சுழன்றடித்தாய்


நாட்களின் சுழற்சியில்
விலகி விட்டேன்
உன்னை விட்டு
தூரமாய் நான்
இன்றும்!!!!!
ஆனாலும்
என் பார்வை
உன் மீதே

என்னவள்

செந்தமிழ்
தேன்மொழியாள்
மலரின்
பெயருடையாள்
சிரிப்பினில்
அழகை அழகாக்குவாள்
கோபத்தில்
மலரின் முள்ளாய்
அன்பில்
தாங்கிடும் அன்னையாய்
என்றும் என்
வாழ்வில் துணையாய்

லவ் லெட்டர்

பார்வைகளிலே
விழுங்கி விழுங்கி
தெருக்களின்
ஓரத்திலெல்லாம் தரிசித்து
பல  நிமிடங்களுக்கு பின்
கடிதம்
தந்திட்டான் தைரியமாய்!!!!

அவன்விரல் தீண்டிய
காகிதம் என்விரல்களில்
அடைப்பட்டப் பொழுதோ
எரிதனலாய் கொதித்ததே
அவன் இதயத்துடிப்பை
எழுதியிருப்பானோ!!!!

கடிதத்தின் மேல்பாகம்
வெள்ளையாய் தெரிந்ததே
அவனி்ன் மனம்
வெள்ளையென்பதை
உணர்த்து கின்றானோ!!!!!!


கடிதத்தினில்
கவிதை எழுதியிருப்பானோ
அல்லது என்னை
ஓவியமாய் தீட்டியிருப்பானோ
ஒன்னுமே புரியலையே

                             


பார்த்தேன் ரசித்தேன்
அனைத்தேன் பிரித்தேன்
அவன் தந்த
கடிதத்தை புன்னகையுடன்.......

அவன் இதயத்துள்
நானிருப்பதை அறிந்திடும்
ஆவலில் தரையினில்
கால்கள் இல்லாமல்
பறந்துக் கொண்டே.......

காகித ஓரங்களில்
அவன் சரீரத்தின்
வியர்வை துளிகள்
திட்டு திட்டாய்!!!!

மடிப்புகளை களைந்து
திறந்து விட்டேன்
என்னை ரசித்தவன்
கொடுத்த கடிதத்தை

படித்தவுடன்
என்னிதயமே
நின்று விட்டதோ
போன்ற எண்ணம்
"என்னுடம் படிக்கும்
அவள் தங்கச்சிக்கு
வீட்டில் தந்த
விடுப்பு கடிதம்" அது

செந்தமிழ்ச் சாரல்

** ** செந்தமிழ்ச் சாரல் ** **

செம்மொழியாம்
மொழிகளின்
தாய் மொழியாம்
தமிழ் மொழியில்
கவிதைகளையும்
படைப்புகளையும்
அள்ளித் தரும்
தளம் இது!!!!!!

கவிஞர்களை
மட்டுமல்ல
எழுதிடும்
ஆர்வமு ள்ளவர்களையும்
கவிஞர்களாக்கிடும்
தளம் இது...

போட்டிகளில்
மட்டுமல்ல
சான்றிதழ்
வடிவமைப்பிலும்
தனித்தன்மையினை
வெளிக் காட்டிடும்
தளம் இது...........

மகளிர்க்கு என்று
சமையல் நிகழ்ச்சியும்
உண்டு இத்தளத்தில்!!!!
சமையல் சுவை
போன்றே
எல்லா சுவைகளும்
கலந்திட்ட தளமே
செந்தமிழ்ச் சாரல் தளம்......

செந்தமிழ்ச் சாரல்
தளம்
தமிழர்க்கான தளம்
தமிழ் மொழிக்கான தளம்
திறமைகளை
ஊக்குவிக்கும் களம்
வளர்ந்திடும் தினமும்
மற்றோர் பார்வைக்கு
வியப்பளிக்கும் படி.....
தாண்டிடும்
நூறு நாட்கள் மட்டுமல்ல
நூறாண்டுகளும்......

Thursday, December 8, 2016

குடும்பமெனும் தோட்டம்

காலையில் பூத்திடும்
மலரின் மணம்
மாலையில் வாடிவிடும்
குடும்பமெனும் உறவில்
மனம் எனும் மலர்
எப்பொழுதும் வாடாமல்
காத்திடுவதே அன்பு!!!!!
குடும்பமெனும் உறவு
தாலி கயிற்றிலும்
மோதிரத்திலும்
மட்டும் இணைவது அல்ல!!!
மனங்களின் முடிச்சிலும்
அன்பின் இணைப்பிலும்
உருவாகிட வேண்டும்!!!!
திருமணம் என்பது
இருமனதின் சங்கமம்
குடும்பமெனும் உறவுக்கு
தினந்தோறும்
அன்பு எனும்
உயிரேற்றி
காதலெனும் ஆதவனை
உதித்திட செய்திட வேண்டும்!!!!


குடும்பமெனும் உறவில்
"பெற்றோர்" எனும்
தகுதிக்கும் அன்பே
பிரதானம்!!!!
வளத்தில் நலத்தில்
குறைகள் இருந்தாலும்
அன்பில் குறை கூடாது!!!!



காத்திடுவோம்
குடும்ப மெனும்
தோட்டத்தை
அன்பெனும் மலர்களால்
பூந்தோட்டமாக
வாழ்வின் இறுதி வரை.............

Wednesday, December 7, 2016

காலம் மாறிப் போச்சி

காலம் மாறிப் போச்சி
கலிகாலம் முற்றி போச்சி

உடுத்தியது படுத்தது போக
ஆசைப்பட்டத்திலை எதுவும்
அந்த காலத்திலே
ஆனால் இன்றைக்கு
உடுத்தவும் உண்ணவும்
கோடி கோடியாக
சேர்க்கின்றார் பூமியிலே
பலருக்கும்
கிடைக்க வேண்டியதை
பதுக்கின்றார் ஒருவரே
இப்பூமியிலே
உழுதவன்
விளைஞ்சதை
பதுக்க விரும்புவதில்லே
ஆனால்
விலை வைத்து விற்பவன்
பதுக்குறான் பூமியிலே!!!




வேகம் வேகம்
வேகம் என்று சொல்லிசொல்லியே
விளைச்சலிலும் வேகம்
பிறப்பிலும் வேகம்
உணவிலும் வேகம்
படிக்கும் வயதிலே
வாகனத்தை வாங்கி
வேகமாக சென்று
மரணத்தையும் வாங்குகின்றான்
வேகமாகவே பூமியிலே!!!

வேகம் ஓடியோடி
கோடி கோடியா
சேத்து வைச்சாலும்
அடுத்தவன் வயிற்றில்
அடித்து அதை
பதுக்கி பதுக்கி வைத்து
தங்க தட்டில் சோறுண்டாலும்
உன் முடிவு
மண்ணில் தானடா மானிடா!!!!!!!

உயிரோடிருக்கும் பொழுது
பொன்னும் வெள்ளியும்
எடை கணக்கில் போட்டு
அழகு பார்த்தாலும்
உன் சாம்பலின் மதிப்பு
செல்லா காசுதானடா மானிடனே

Friday, December 2, 2016

எந்த ஜென்மத்தில் முடிப்பது நான்...????



நின் மீதான
காதல்
முழுவதையும்
எழுதிட தான்
நினைக்கின்றேன்

ஆனால்
ஒவ்வொரு முறை
முடித்தப் பின்னும்
இன்னும்
நின் காதலை
சொல்லிட
ஆரம்பிக்கவேயில்லை யென்றே
என் மனம் என்னுள்
சொல்கின்றதே.........

நின் காதலை
இந்த ஜென்மத்தில்
ஆரம்பித்து
எந்த ஜென்மத்தில்
முடிப்பது நான்...????