வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, June 9, 2018

என் கிறுக்கல்கள்........

>>>>>>>> என் கிறுக்கல்கள்

வார்த்தைகளில் கற்பனை சேர்த்து
அழகு சேர்த்திடுவதில்லை!

மனதின் ஆதங்கத்தை
கொட்டுகின்றேன் வெண் காகிதத்தில்!

காதலையும் காதலித்து
நட்பையும் நேசித்தே
எழுத்துகளை அழகாக்குகின்றேன்
பொய்களினால் அல்ல!

இயற்கை அன்னையையும்
சமூக நிகழ்வுகளையும்
கண்டு ரசித்து ஏங்கியே
எழுத்துகளை தீட்டுகின்றேன்!

என் எழுத்துகள்
கவிதைகள் அல்ல
என் மனதின்
கிறுக்கல்களே……………..

Friday, June 8, 2018

காதல்…… காதல்…..காதல்

>>>>>>>>> காதல்…… காதல்…..காதல்
ஆயிரக்கணக்கில் இனங்கள் இருந்தாலும்
அனைத்திற்கும் பொதுவான
ஓரினம் காதலே!
கணக்கற்ற மொழிகள் இருந்தாலும்
உலகெல்லாம் எல்லா மொழிகளிலும்
சிறந்த சொற்றொடர் காதலே!
உலகெல்லாம் இயற்கை சூழல்
மாறுப்பட்டிருந்தாலும் எங்கும்
என்றும் மாறுபடாது வாழுவது
காதலென்ற ஒரே சூழலே!
காற்று மாசுப்பட்ட இடங்களிலும்
மாசில்லாது தெளிவானது
இதயங்களில் வாழும் காதலே!
காதல் காதல் காதல்
உலகெங்கும் அல்ல!
உயிருள்ள இடங்களிலெங்கும்!
உயிர்களை நேசிக்க வைப்பதும்
காதலே!
வாழ்க்கையினை இனிமையாக வைப்பதும்
காதலே!


ஆதிமனிதனை சிந்திக்க வைத்ததும்
காதலே!
காட்டுமிராண்டியை நாகரீக
மனிதனாக்கியதும் காதலே!
இயற்கையையும் பெண்ணையும்
இணைத்து கவிப்படைத்திட
ஆண்களை கவிஞனாக்கியதும் காதலே!
காதலில்லாத ஜாதியுமில்லை
காதலில்லாத இனமுமில்லை
காதலில்லாத உயிர்களுமில்லை!
பறவைகளின் குரல்களில்
தெரிவதும் காதலே
விலங்குகளில் பலத்தில்
தெரிவதும் காதலே!


கடவுளில்லாத இனங்களுண்டு
ஆனால் காதலில்லாத
ஜனங்களு மில்லை!
காதல் காதல் காதல்
உலகெங்கும் என்றும் இளமையாய்!
காதலை சுவாசித்திடுவோம்
வருடிடும் தென்றல் காற்றாய்!

Friday, May 4, 2018

விலகிச் செல்லாதே!




கரையை விட்டு
நீங்கிச் செல்வதில்லை
கடலலைகள் என்றுமே!
காற்றை விட்டு
பிரிந்துச் செல்வதில்லை
தென்றல் என்றுமே!
மேகத்தை விட்டு
தனித்து இருப்பதில்லை
நிலவு என்றுமே!
நிஜத்தை விட்டு
பிரிந்துச் செல்வதில்லை
நிழல் என்றுமே!
எரித்துக் கொண்டேயிருந்தாலும்
விலகி நிற்பதில்லை
சூரியனை விட்டு பூமி என்றுமே!
என்றுமே பிரிந்திடாத
விலகிடாத உறவாய்
நீ வேண்டுமென்றே
விரும்பினேன் கனவிலும் நனவிலும்!

எப்படி பெண்ணே
என்னை விட்டு
பிரிய எண்ணினாய்!
விலகிச் செல்லாதே பெண்ணே
விலகிச் செல்ல எண்ணினால்
வலியில்லாது உடலை விட்டு
உயிரை எடுப்பது போன்று
விலகி சென்றிடு என்னவளே!

போ ............ போகாதே

தள்ளிச் செல்
என்று சொல்லியும்
தேடிப் பார்க்கின்றேன்
விழி காணா தூரத்திற்கு
சென்றுவிடுவானோ என்ற
பயத்தினில்!
வராதே
என்று சொல்லியும்
வந்து பார்க்கின்றேன்
எங்கு வராமல்
போய் விடுவானோ என்ற
தயக்கத்தில்!
இதய கதவினை
மூடியே வைக்கின்றேன்
அவனை உள்
வரக் கூடாதென்று அல்ல!
கதவின் பின்னால்
அவனின் தத்தளிப்பை
ரசிக்க வேண்டுமென்றே!

Thursday, February 8, 2018

என்னுயிர் நீ தானே

             ***** என்னுயிர் நீ தானே

உந்தன் நினைவுகள்
எந்தன் மனதினில்
நினைவுகளோடு மட்டுமல்ல
என்னுடலிலும்
செங்குருதியில் கலந்தே
உலா வருகின்றது
என்னை என்னுள்!

மன்னவனே
என்னிழலிலும் காண்கின்றேன்
எனக்கான உன்னுருவத்தை!
எங்கோ ஒலித்திடும்
மெல்லிசையிலும் என்னை
அழைப்பதாய் உணர்கின்றேன்!
யாரோ என்னை
பேர் சொல்லி அழைத்திட்டப் பொழுதும்
உங்குரலாய் எந்தன் செவிகளில்!
எந்தன் உடல் மட்டுமல்ல
எந்தன் உயிரும் நீதானே
உன் நினைவுகளை
மறந்திடும் நாளே
என்னுயிரும் என்னை
கடந்து சென்றிடுமே!